search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சதுர்த்தி"

    • லட்டுவை வாங்குவதில் பக்தர்களிடம் கடும் போட்டி நிலவும்.
    • சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்பட்டது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகருக்கு லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும், பின்னர் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில் லட்டு ஏலம் விடப்படுவதும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த லட்டுவை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதுடன் ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால் லட்டுவை வாங்குவதில் பக்தர்களிடம் கடும் போட்டி நிலவும்.

    இந்த நிலையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான பந்தலகுடாவில் உள்ள சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது.

    அந்த லட்டு ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது. கடந்த ஆண்டு லட்டு ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த முறை அதன் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.

    அதேபோல் ஐதராபாத்தின் பாலப்பூர் நகரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. தங்க லட்டு என்று அழைக்கப்படும் 21 கிலோ எடையுள்ள பிரபலமான லட்டுவை தாசரி தயானந்த் ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.

    • சமபந்தி விருந்தை தாமரைபாரதி தொடங்கி வைத்தார்
    • பஜனை மற்றும் திருவிளக்கு பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தென்தாமரைகுளம் :

    அகஸ்தீஸ்வரம் அருகே வெள்ளையந்தோப்பு வெள்ளை விநாயகர் இந்து இளைஞர் இயக்கம் சார்பில் நடைபெற்ற

    20-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் விஜர்சன விழா கடந்த 18ஆம் தேதி 7 நாட்கள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு விநாயகருக்கு பூஜையும், 8மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விஜர்சன விழாவை யொட்டி வெள்ளையந் தோப்பு ஸ்ரீமன் நாராயண சாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற சமபந்தி விருந் தினை தி.மு.க. வர்த்தகர் அணி இணைச் செயலாள ரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் பேராசிரியர் ரத்தின சிகாமணி தலைமை தாங்கினார். செயலாளர் சுயம்புலிங்கம், பொருளாளர் முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர் ராகவன் ஆகி யோர் முன்னிலை வைகித்த னர். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் துணை ஒருங்கி ணைப்பாளர் சுதன்மணி, மணிராஜா, தங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை வெள்ளையந்தோப்பு வெள்ளை விநாயகர் இந்து இளைஞர் இயக்க நிர்வாகி கள் செய்திருந்தனர்.

    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.
    • இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் 1519 விநாயகர் சிலைகளும், ஆவடி கமிஷனர் அலுவலக பகுதியில் 204 சிலைகளும், தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் 425 சிலைகளும் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2148 சிலைகளுக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

    இந்துமுன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரதிய சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைத்திருந்தனர்.

    இந்த சிலைகள் அனைத்தையும் ஒருவார கால பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். இதன்படி கடந்த 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகளை இன்றும் நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.

    இதன்படி சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நடபெற்றது. பாரதிய சிவசேனா அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பூஜைக்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர். இதையொட்டி சென்னை மாநகர போலீசார் 16,500 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆவடி கமிஷனர் அலுவலக போலீசார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தாம்பரத்தில் இருந்து 1,500 போலீசாரும் பாதுகாப்புக்காக ஊர்வலம் செல்லும் பாதைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

    இந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இதன் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

    நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புளியந்தோப்பு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

    அடையாறு, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நீலாங்கரையிலும், வட சென்னை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதியிலும் கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளில் கரைக்கப்பட்டது போக மீதமுள்ள சிலைகள் நாளை கடலில் கரைக்கப்பட உள்ளது.

    இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஊர்வல பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    • விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.
    • சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்திவிழா கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர், ஜனப்பசத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர், சோழவரம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரணி, மணலி, பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் பழவேற்காடு கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தடுப்பு அமைத்து ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

    டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் திருப்பாலைவனம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், பொன்னேரி இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    2 கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும், பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், சிலைகள் வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.

    • காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
    • இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் சதுர்த்தி பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக (விஜர்சனம்) நேற்று மாலை புதுவை சாரம் அவ்வை திடலிருந்து புதுவை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் நடந்து சென்றனர்.

    அதுபோல் மதுரை வீரன் கோவில் தெரு விநாயகர் சிலையின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர்.

    காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.

    இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க புதுவை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • விநாயகர் சிலையின் கையில் 11 கிலோ லட்டு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
    • வீடியோவில் வாலிபர் ஒருவர் விநாயகர் சிலை அருகே வந்து ஏலத்திற்கு விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த லட்டை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்-மியாபூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையின் போது லட்டு படைக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்படுகிறது. இதனை பல ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுப்பார்கள்.

    இந்த நிலையில் மியாபூரில் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலையின் கையில் 11 கிலோ லட்டு வைத்து வழிபாடு நடத்தினர்.

    இந்த லட்டு 7 நாட்களுக்கு பிறகு விசர்ஜனம் நேரத்தில் ஏலம் விட முடிவு செய்திருந்தனர்.

    நேற்று காலை விநாயகர் சிலை அருகே சென்ற பக்தர்கள் விநாயகர் சிலை கையில் இருந்த ராட்சத லட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர். அதில் வாலிபர் ஒருவர் விநாயகர் சிலை அருகே வந்து ஏலத்திற்கு விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த லட்டை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
    • விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1,519 பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் நாளை (சனி) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 16 ஆயிரத்து 500 போலீசார், 2 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர்.

    மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சிலைகளை கரைக்கும் பணியில் ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. விநாயகர் சிலைகளை படகில் எடுத்து கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வில் நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதில் சென்னை போலீசார் தனி கவனம் செலுத்தி உள்ளனர். அதன்படி, சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

    மேலும் தடையை மீறி யாரேனும் கடலில் இறங்குகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து போலீசார் 'பைனாகுலர்கள்' மூலம் கடற்கரை பகுதியை கண்காணிப்பார்கள்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறுகையில், 'பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க வேண்டும்.

    கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம்.
    • ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சில இடங்களில் விநாயகர் சிலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களை காட்சிபடுத்தி உள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் ஜெய்ராம்பூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பந்தலில் விநாயகப் பெருமானின் 108 விதமான வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

    சங்கு, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ், சாய்பாபா, சிவன், கிருஷ்ணா மற்றும் பல வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அனில் ஆகா கூறுகையில், நாங்கள் கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம். இந்த ஆண்டு 108 விதமான வடிவங்களில் விநாயகப் பெருமானை சித்தரித்துள்ளோம் என்றார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வழிபாடு நடைபெற்றது. திருவள்ளூரில்-111, திருத்தணி-121, ஊத்துக்கோட்டை-209, பொன்னேரி-46, கும்மிடிப்பூண்டி-153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.

    நேற்று முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர் பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஆயில் மில் பகுதிக்கு டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்தனர். பின்னர் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அனுமதித்த குறிப்பிட்ட வழித்தடங்களில் விதிமுறைப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு கொண்டு சென்றனர்.

    திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மு.வினோத் கண்ணா தலைமை தாங்கினார். மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டு சென்றது. இந்த ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோவில் தேரடி, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, காக்களூர் சாலை வழியாக ஏரிக்கு மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல் பாடல்களுடன் கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து காக்களூர் ஏரியில் ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்த் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

    கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், வடமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு நேற்று துடியலூர் பஸ் நிறுத்தத்திற்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார்.

    அதன் பேரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜூ, கிருஷ்ணா மற்றும் பலர் மீது அனுமதியின்றி கூடியது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், சிலை எடுத்து செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
    • கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

    மாமல்லபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெருக்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நேற்றும் வருகிற 24 ந்தேதி (ஞாயிற்றுகிழமை) மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரம், பாலுசெட்டிசத்திரம், வாலாஜாபாத், செவிலிமேடு, கருக்குபேட்டை, முத்தியால்பேட்டை, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம், பாலூர், படாளம், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் 6 அடி, 10 அடி, உயரமுள்ள விநாயகர் சிலைகள் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    முதல் கட்டமாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினார்கள். இதையடுத்து ஒவ்வொரு சிலையாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு இடங்களில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் ஏற்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டார்கள். பின்னர் நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளும் நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. கடற்கரையில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் தலைமையில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்
    • பொதுமக்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அறக்கட்டளை சார்பில் 26-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதன் தலைவர் கே.மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் உறுப்பினர்கள் வி.எஸ்.சரவணன், ஏ.ஐய்ப்பன், செயலாளர் எம்.விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். நாகேந்திர குமார், நகரமன்ற உறுப்பினர்கள் பா.சாந்தி பாபு, மா.பா சாரதி, சித்ரா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர திமுக செயலாளருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், ஏழை பெண்கள் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள், 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவப்பிர காசம், ஆர்.டி.கிரி, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.சிரஞ்சீவி, விழாக்குழு பொருளாளர் எஸ்.கணேசன், துணை தலைவர் ஆர். ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் நரேஷ், ஜோதீஸ்வரன், ஆர்.வி. கெளசிகரம், ஜி. தீனு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழாக்குழு பொருளாளர் ஏ.பாலமுருகன் நன்றி கூறினார்.

    ×